அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் திருநங்கைகள். 

பரமக்குடியில் 10 வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தராத அரசை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக திருநங்கைகள் அறிவித்துள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தில் 130 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பரமக்குடி தாலுகா வேந்தோணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருநங்கை நகரில் இடம் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கபட்டது. இந்த வீடுகளில் 30 திருநங்கைகள் உள்ளனர். மற்றவர்கள் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வசிக்கின்றனர்.
பரமக்குடி திருநங்கை நகரில் 10 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். 2010 ஆம் ஆண்டு போடபட்ட சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் முதியவர்கள் சென்றுவர சிரமபடுகின்றனர்.தெருக்களில் சிமெண்ட் சாலை வசதியில்லாததால், மழை காலங்களில் தெருக்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
தெருவிளக்குகள் இல்லை. வீடுகளுக்கு மின் இணைப்பு முறையாக வழங்கப்படாததால் மண்ணெண்ணை விளக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. இரவில் அச்ச உணர்வுடன் தூங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எங்கள் பகுதியில் ஒரு போர்வெல் கூட மாவட்ட நிர்வாகம் அமைத்து தரவில்லை. இதனால் குடிதண்ணீருக்காக வாராவாரம் ரூபாய் 2 ஆயிரம் வரை செலவாகிறது. இதற்கு ஏற்றாற்போல் எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. மேலும் கழிப்பறை வசதி இல்லை.
எங்கள் குடியிருப்புகளை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கொசு தொல்லையால் நோய்கள் பரவி அவதிப்படுகிறோம். பரமக்குடியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் படித்த பட்டதாரிகள், எங்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 130 திருநங்கைகளும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம், ஓட்டு கேட்டு யாரையும் எங்கள் பகுதியில் நுழையவிட மாட்டோம் என முடிவெடுத்துள்ளோம் என அறிவித்தனர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக திருநங்கைகள் அறித்துள்ளதால் பரமக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *