தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது-முதலமைச்சர்

 

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலதிதில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், குறுகலான தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கத்தால் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவுவதாக தெரிவித்த முதலமைச்சர், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய தன்னார்வலர்களை பயன்படுத்தலாம் என்றார்.
தடை செய்யப்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நியாயவிலைக்கடைகளில் டோக்கன் முறையில் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், டோக்கனில் மக்கள் வரவேண்டிய நேரம் நாள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். விவசாய பொருட்களுடன் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் மறிக்க கூடாது என்றும், விவசாயிகள் தங்கள் பணிகளை தொடர எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலத்தில் அனைத்துவிதமான தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளும் செயல்பட மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கலாம் என தெரிவித்த முதலமைச்சர், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். உணவகங்களில் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *