நிலச்சரிவில் உயிரிழந்த பாசமான சிறுமியை கண்டுபிடித்த பாசத்துக்குரிய நாய்.

மூணாறு அருகே நடந்த நிலச்சரிவில் சிக்கிய சிறுமியின் உடலை மீட்க அவர்கள் வளர்த்த நாய்  உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நடந்த நிலச்சரிவால் மனிதர்கள் மட்டுமல்லாமல் வளர்ப்பு பிராணிகளும் பாதிக்கப்பட்டன. இந்த குடியிருப்பில் வசித்த ஒரு வீட்டில் நாயை வளர்த்து வந்துள்ளனர். ஆனால் நிலச்சரிவில் அந்த நாய் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. ஆனாலும், தன்னை வளர்த்தவர்கள் மண்ணோடு புதைந்தது அந்த நாய்க்கு கடும் துக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நாள்முதல் அப்பகுதியில் தன்னை வளர்த்தவர்களை தேடி அந்த நாய் துக்கத்துடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

இது காண்போரை கண்கலங்க வைத்தது. அந்த மயான பூமியில் தன்னை வளர்த்தவர்களை தேடி அந்த நாய் மீட்புப்படையினருடன் கடந்த சில தினங்களாக அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அது யாரை தேடி ஓடுகிறது என மீட்புப்படையினருக்கு தெரியாமல் இருந்தது. நிச்சயமாக அந்த நாய் தன்னை மிகவும் நேசித்த எஜமானரைத்தான் தேடுகிறது என மீட்புப்படையினர் புரிந்து கொண்டனர். இதையடுத்து அந்த நாயை மீட்புப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல அந்த நாய் அப்பகுதியில் அலைந்து ெகாண்டிருந்தது. திடீரென அருகில் உள்ள ஆற்றை பார்த்தபடி நீண்டநேரம் அங்கேயே நிற்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த மீட்புப்படையினர் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மரத்துக்கு இடையே ஒரு குழந்தையின் உடல் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையின் உடலை மீட்டனர். அது பிரதீஷ் மற்றும் கஸ்தூரி தம்பதியின் மகள் தனுஷ்கா(2) என தெரியவந்தது. ஏற்கனவே பிரதீஷின் உடல் ஏற்கனவே கிடைத்தது. கஸ்தூரி மற்றும் மூத்த மகள் பிரியதர்ஷிணி ஆகியோரின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த குடும்பத்தில் தனுஷ்காவின் பாட்டி கருப்பாயி மட்டும் உயிர்ப்பிழைத்துள்ளார்.

இந்த குடும்பத்தினர்தான் நாயை வளர்த்து வந்துள்ளனர். ‘குவி’ என்று அந்த நாய்க்கு பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். அந்த நாயிடம் தனுஷ்கா மிகவும் பாசமாக இருந்து வந்துள்ளார். அவரைதான் அந்த ‘குவி’ தேடி வந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *