நெல்மடூர் ஊராட்சியில் கொட்டப்படும்  குப்பைகள். குப்பை கிடங்காக மாறிய அவலம்..  விவசாயிகள் கவலை.

நெல்மடூர் ஊராட்சியில் கொட்டப்படும்  குப்பைகள்.
குப்பை கிடங்காக மாறிய அவலம்..
விவசாயிகள் கவலை.
பரமக்குடி அருகேயுள்ள நெல்மடூர் கிராமம் ஊராட்சி பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்.கால்வாய்களை குப்பைகளை கொட்டி அடைப்பதால்  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில் மேலபார்த்திபனூர், நெல்மடூர் ஊராட்சிகள் அருகருகே அமைந்துள்ளது. மேலபார்த்திபனூர் ஊராட்சியில் ஏராளமான  வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் உருவாகியுள்ளன. மக்கள் தொகையும் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த வளர்ச்சியும்  ஏற்படவில்லை. மேலபார்த்திபனூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை ஊழியர்கள், தாங்கள்  சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் அருகிலுள்ள நெல்மடூர் கிராமத்தில் கொட்டுகின்றனர். மேலும், மேலபார்த்திபனூர் கிராமத்தில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட இடிபாடுகள்,  மரங்கள், கோழி, ஆடு இறைச்சி கழிவுகள் ஆகியவையும் நெல்மடூரில் கொட்டப்படுகின்றன. வரத்து கால்வாய்களிலும் குப்பைகளை கொட்டியுள்ளனர். நெல்மடூரில் கொட்டப்படும் குப்பைகளை மாடு, பன்றி,  நாய் ஆகியவை கிளறி அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மர்மநபர்கள் சிலர், அனைத்து  கழிவுப் பொருட்களும், பிளாஸ்டிக் கழிவுகளோடு சேர்த்து தீ வைத்து  எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் நோய்,  இருமல், மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்பட நோய்கள் ஏற்படுவதோடு, குடியிருப்பு பகுதி புகை மண்டலமாக  காணப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வருவாய்த் துறை உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும். நிலத்தடி நீர் மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால், கிராமம் சீரழிவதோடு, கண்மாய்களில் தண்ணீர் தேங்குவது கேள்விக்குறியாகி விடும் என, விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே, வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கும் முன், நெல்மடூரில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *