பரமக்குடியில் ரூ 20 கோடிக்கு மேல் பட்டுச் சேலைகள் தேக்கம் – கச்சாப் பொருட்கள் பற்றாக்குறைவால் பட்டு நெசவுத் தொழில் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பரமக்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள  பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது, கச்சாப் பொருள்கள் பற்றாக்குறையால் பட்டு நெசவுத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி – எமனேசுவத்தில் 60 க்கும் மேற்பட்ட தனியார் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் தங்களது வீடுகளில் தறிகள் அமைத்து  குடும்ப பாரம்பரியமாக வண்ணமிகு பட்டுச் சேலைகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுச் சேலைகள் ரூ 3 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை மதுரை, சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் பெரிய ஜவுளி கடைகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுச் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர்,சூரத், டெல்லி உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப் படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ளதால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியும், நாடு முழுவதும் கடைகள் மூடப் பட்டுள்ளதால் வெளியூர்களுக்கு பட்டுச் சேலைகளை அனுப்புவதும் பாதிக்கப் பட்டுள்ளது.இதனால் பரமக்குடியில் ரூ 20 கோடிக்கு மேல் பட்டுச் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் பட்டு சேலை நெசவாளர்கள் தற்போது பட்டுச் சேலை உற்பத்திக்கான கச்சாப் பொருட்கள் கிடைக்காததால் தொடர்ந்து தொழில் கிடைக்காமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று நெசவாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
 எனவே கைத்தறி பட்டுச் சேலை நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வகையில் கச்சாப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *