மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை கூறி வருகிறார்.முக ஸ்டாலினுக்கு பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் கண்டனம்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன்பிரபாகர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகளை பரமக்குடியில் மேற்கொண்டார் அப்போது   நிருபர்களிடம் கூறியதாவது –

கொரோனா அச்சுறுத்தல் உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. ஆனாலும் பிரதமர் மோடி ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாலும்,துரிதமான செயல்பாடுகளினாலும் இந்தியாவிலும்,தமிழ் நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகி உள்ளது.
உலக அளவில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.அமெரிக்கா அதிபர் கூட இந்தியப் பிரதமரிடம் குளோரோ குயின் என்னும் கொரோனா தடுப்பு மருந்தினை கேட்டு பெற்றுள்ளார்.இந்திய அளவிலும்,தமிழக அளவிலும் கொரோனாவினால் பாதிக்கப் பட்டவர்கள் மற்ற நாடுகளை விட குறைவு தான்.கொரோனா பாதிப்பில் இருந்து 30 சதவீதம் பேர் மீண்டுள்ளனர்.இறந்தவர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் ஆகும்.
இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திறமையான நடவடிக்கை தான். கொரோனா தொற்றால் ஏழைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,கூலித் தொழிலாளர்கள்,நெசவாளர்கள்,
மீனவர்கள்,ஆட்டோ – ரிக் ஷா தொழிலாளர்கள் மற்றும் சிறு -குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.அன்றாடம் குடும்பம் நடத்துவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் மு.க.ஸ்டாலின் தினமும் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகளை குறை கூறி வருகிறார். தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளை மு.க. ஸ்டாலினுக்கு மனமில்லை. மக்களை ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை கூறி வருகிறார். கொரோனாவால் இறப்பவர்களுக்கு ரூ 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டுமென கூறுகிறார்.தி.மு.க.ஆட்சி காலத்தில் யாருக்காவது இவ்வளவு நிவாரணத் தொகை வழங்கியது உண்டா?. பொதுமக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கும் ஸ்டாலின் தான் ஏமாற போகிறார்.ஊரடங்கு காலத்திலும் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர்கள்,அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *