வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்காததால் பொதுமக்கள் தொழுகை நடத்த தடை நீடிப்பு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு.

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

ஜுன் 8ஆம் தேதியிலிருந்து வழிபாட்டுத் தளங்களை திறப்பதற்கு மாநில அரசுகள் முடிவுசெய்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதன்படி தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது சம்பந்தமாக அனைத்து சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் கடந்த 3ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் 8ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கான உத்தரவும் வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தோம்.

இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராத காரணத்தால் தொடர்ந்து பள்ளிவாசல்களில் பொதுமக்கள் தொழுகை நடத்துவதற்கு தடை நீடித்து வருகிறது என்பதை பள்ளிவாசல் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரியில் 8ஆம் தேதியிலிருந்தும் கேரளாவில் 9ஆம் தேதியிலிருந்தும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்புகளை பார்த்த பொதுமக்கள் தமிழ்நாட்டிலும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

எனவே அண்டை மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்து தமிழகத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கருதி பள்ளிவாசல்களுக்கு பொதுமக்கள் தொழுகைக்காக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று ஐக்கிய ஜமாத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *