செய்தியாளர்களாக பணியாற்றுபவர்கள் அனைவருக்கும்  நிவாரணமான ரூ. 3 ஆயிரம் வழங்க  வேண்டும். தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வேண்டுகோள்.

செய்தியாளர்களாக பணியாற்றுபவர்கள் அனைவருக்கும்  நிவாரணமான ரூ. 3 ஆயிரம் வழங்க  வேண்டும்

தமாகா கட்சியின் தலைவர்
ஜி.கே வாசன் வேண்டுகோள்

தமிழக அரசு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் உள்ள மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வருவதால் மக்கள் ஓரளவுக்கு சிரமத்தில் இருந்து மீள்கிறார்கள்.

அந்த வகையில் களப்பணி ஆற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரணமாக ரு. 3 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியதால் பத்திரிக்கையாளர்கள் பலனடைகிறார்கள்.

இந்த உதவியானது மாவட்ட அளவில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.

அதே சமயம் கிராமப்புற பகுதிகளில் அன்றாடம் நடக்கின்ற செய்திகளை சேகரிக்க செல்லும் பகுதி நேர செய்தியாளர்களுக்கு இந்த நிவாரண உதவி கிடைக்கவில்லை.

இவர்கள் பகுதி நேர செய்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும் நாள் தோறும் முழு நேரமும் செய்திகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அது மட்டுமல்ல மிகவும் குறைவான சம்பளத்தில் தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோமா என்ற அச்சம் இருந்தாலும் செய்தியாளர் என்ற முறையில் தான் சார்ந்த ஊடகத்துக்காகவும், மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் பணியாற்றுகிறார்கள்.

ஒரு அசாதாரண சூழலில் செய்தியாளர்களின் பணியும் ஒரு விதத்தில் அவசியம் என்பதை நாம் நன்கு அறிவோம்.

குறிப்பாக மாவட்ட அளவில் பணியில் இருக்கும் செய்தியாளர்களை விட தாலுகா, வட்டார, ஒன்றிய அளவில் செய்தியாளர்களாக பணிபுரிபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு கிடைக்கின்ற குறைவான சம்பளத்தை வைத்துக்கொண்டு தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை நடைபெறுகிறது.

மேலும் பகுதி நேர செய்தியாளர்களும் தான் இப்போதைய கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் உள்ளவர்கள். எனவே பகுதி நேர செய்தியாளர்களுக்கும் நிவாரண உதவி கிடைக்க வேண்டும் என்பது தான் நியாயமானது.

அதாவது பத்திரிக்கை, தொலைக்காட்சி என எந்த ஒரு ஊடக நிறுவனங்களுக்காக பணியாற்றும் செய்தியாளர் ஒவ்வொருவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என செய்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் செய்தியாளர்கள் மட்டுமே அரசு அறிவித்த நிவாரணமான ரூ. 3 ஆயிரத்தை பெற்று பயன் பெறுகிறார்கள்.

எனவே தமிழக அரசு – ஊடகத்துறையில் களப்பணி ஆற்றும் செய்தியாளர்களை ஒரு அசாதாரண சூழலில் முழுநேரம், பகுதி நேரம் எனப் பார்க்காமல் மாவட்டம், தாலுகா, வட்டாரம், ஒன்றியம் என மாநிலம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் அனைவருக்கும் அரசின் நிவாரணம் ரூ. 3 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *