எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். –இயக்குனர் ரஞ்சித் .

 

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.
நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த
நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, “நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்” என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.
இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் டி. கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம். திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கொரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது? என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது . இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்ற தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.

இந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும். இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு நாம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கடக்க முடியாத பொழுதுகளுடன்,
பா.இரஞ்சித்.
________________________________________

இந்த கொரோனா காலத்திலும் தலித் மக்கள் மீது நடந்தேறிய
சாதிய தீண்டாமை வன்கொடுமைகள்.

1) நாமக்கல் மாவட்டம்:
(14.04.2020) ஏப்ரல் மாதம்

நாமக்கல் ராசிபுரம் பலிப்பாக்குட்டை சமத்துவபுரத்தில் தலித்பெண்ணை “சாதிப்பெயரை சொல்லி திட்டி செருப்பால் தாக்கிய வன்னியர்கள்”.
இந்நிலையில், கடந்த 14.04.2020 அன்று காலை சுமார் 7.00 மணியளவில் வழக்கம் போல தலித் பெண் அனிதா தனது வீட்டருகில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் வன்னியர் சமுகத்தை சேர்ந்த சரசு மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் தலித் சமூக பெண் அனிதாவை பார்த்து “வந்துட்டா பாரு சக்கிலி தேவிடியா” என்று அசிங்கமாக திட்டி உள்ளனர். உடனே அனிதா “யாரை திட்டுகிறாய்” என்று கேட்ட போது, “உன்னத்தான்டி” என்று மீண்டும் சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டியும், செருப்பு (ம) குடத்தால் கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

2)சேலம் மாவட்டம்;
(11.04.2020)ஏப்ரல் மாதம்

ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரத்தில் எஸ்.என்.கே எனும் ஜவ்வரிசி ஆலை இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்திரவை அடுத்து ஜவ்வரிசி ஆலை கடந்த வாரம் முதல் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று கூலித்தொழிலாளியான கார்த்தி(21) சனிக்கிழமை பணியில் இருந்தபோது ஆலையின் கழிவுநீரில் இயற்கை எரிவாயு அமைக்கும் தொட்டியின் வால்வை திறக்க சென்றபோது உயிரிழந்துள்ளர்.அவரை காப்பாற்ற சென்ற கார்த்தியின் பெரியப்பா ஆறுமுகமும்(45) உயிரிழந்தனர்.

3) தூத்துக்குடி மாவட்டம்:
(28.03.2020)மார்ச் மாதம்

கடந்த, மார்ச் 28-ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்சந்தூர் அருகேயுள்ள தோப்புரை சேர்ந்த தலித் இளைஞர் ராஜதுரை சாதியத் தீண்டாமை ஆணவத்துடன் வெட்டிப்படுகொலை நிகழ்ந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது…..

4) கள்ளக்குறிச்சி மாவட்டம்:
(30.03.2020) மார்ச் மாதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞன் பாண்டியனை படுகொலை செய்யும் நோக்கத்தோடு, ஜாதிவெறி பிடித்த வன்னியர்கள் கடந்த 30.03.2020 அன்று திட்டமிட்டு வரவழைத்து, உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்து, பக்கத்தில் உள்ள காட்டில் வீசி உள்ளார்கள் சாதிவெறி கும்பல்கள்.

5) சிவகங்கை மாவட்டம்:
(06.04.2020)ஏப்ரல் மாதம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மாங்குளம் ஊராட்சியில் மூங்கிலுரணியைச் சேர்ந்த தலித் சமுகத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான பாக்கியம், லட்சுமி
தன் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.இவர்களின் மீது சாதிய தீண்டாமை ஆணவ வெறித் தாக்குதல்.

6) விழுப்புரம் மாவட்டம்:
(26.03.2020)மார்ச் மாதம்

கடந்த, மார்ச் 26-ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அரும்பட்டு கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள் பொதுக்கிணற்றில் மீன் பிடிக்க சென்றதால் வன்னியர்களால் 50க்கும் மேற்பட்டோர் தலித் கிராமத்திற்கு வந்து எச்சரிக்கை செய்துள்ளனர் இந்த சாதிய தீண்டாமை ஆணவப் போக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…..

7) புதுக்கோட்டை மாவட்டம்:
(21.04.2020) ஏப்ரல் மாதம்

புதுக்கோட்டை, கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் பட்டதாரியான தலித் இளைஞர் முருகானந்தமும் ஆதிக்க சாதியை சேர்ந்த பானுப்பிரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து கடந்த 21.04.2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பானுப்பிரியாவின் குடும்பத்தார்கள் 15 பேர் கொண்ட சாதிவெறிக் கும்பல் முருகானந்தத்தை கடுமையாக அடித்து பானுப்பிரியாவை கடத்தி சென்றனர். பின்னர் பானுப்பிரியா மீட்கப்பட்டுள்ளனர்..

8) திருவண்ணாமலை மாவட்டம்:
(29.03.2020) மார்ச் மாதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள மொரப்பந்தங்கலில் சாதிமறுப்பு திருமணம் செய்த ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் சுதாகரன் சாதி வெறியர்களால் ஆணவ படுகொலை நடந்துள்ளது.

9) திருவண்ணாமலை மாவட்டம்:
(31.03.2020)மார்ச் மாதம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பொது இடத்தில் நட்பு முறையில் ஒரு பெண்ணுடன் தலித் இளைஞர் பேசியதற்கு, எந்த விசாரணையும் செய்யாமல் விடுமுறையில் இருந்த காவலர் கொடூரமாக தாக்கி மண்டியிட வைத்து அவர் அணிந்திருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படம் பொறித்த டி-சர்டை கழற்றி தீ வைத்த சம்பவம்.
அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

10) திருவண்ணாமலை மாவட்டம்:
(28.03.2020) மார்ச் மாதம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் வட்டம் சூரியந்தங்கலில் தலித் இளைஞர் தனசேகரன் பொதுப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக, சாதி வெறி கும்பல் கொடூரமாக தாக்கப்பட்டு வாகனத்தை அடித்து நொறுக்கப்பட்டு வீடுகளும் சூறையாடப்பட்டனர்.

11) திருவண்ணாமலை மாவட்டம்:
(24.04.2020)ஏப்ரல் மாதம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு வட்டம் கீழ்ப்பாச்சார் தண்டா கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 10 தலித் குடும்பங்களை காலி செய்ய வற்புறுத்தி, அவர்களை தாக்கி, அவர்களது வீடுகளை லம்பாடி சமூகத்தை சார்ந்த சாதி வெறி கும்பல் JCB எந்திரம் மூலமாக இடித்து நொறுக்கினார்கள்…

12) கள்ளக்குறிச்சி மாவட்டம்:
(23.04.2020)ஏப்ரல் மாதம்

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் ஆதி சுரேஷ். அம்பேத்கர் உருவ படத்தை சாணம் பூசி கேவலப்படுத்திய சாதி வெறியர்களின் ஆணவத்தை குறித்து பதிவு செய்து வெளிச்சம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாதி வெறி கும்பல்கள் கடந்த 23.04.2020 அன்று ஆதிசுரேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது. சில மாதங்களாக இந்தப் பகுதி மிக
பதட்டத்தில் உள்ளது.

13) திருநெல்வேலி மாவட்டம்:
(29.04.2020)ஏப்ரல் மாதம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே வேப்பன்காடு கிராமத்தில் பொன்ராஜ், மகேஸ்,
மற்றும் ஒருவர் மூன்று தலித் இளைஞர்களை சாதி வெறி கும்பல் பொது இடத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சம்பந்தமாக 27 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது..

14) திருநெல்வேலி மாவட்டம்:
(22.03.2020) மார்ச் மாதம்

மேலபாலாமடையச் சேர்ந்த தலித் இளைஞர் முருகானந்தம்(29) பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் வந்து கொண்டிருந்த முருகானந்தத்தை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

15) சேலம் மாவட்டம்:
(23.04.2020) ஏப்ரல் மாதம்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் T.கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தலித்பெண் அம்சவள்ளி (ம)
தொடக்க வேளாண்மை வங்கியின் (PACB) உறுப்பினராக தலித் இளைஞர் தனபால் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் மக்களின் பிரதிநிதிகளான இருவரையும் பணிசெய்ய விடாமல் தடுக்கும் சாதிய தீண்டாமை ஆணவ
கும்பல்.

16) கடலூர் மாவட்டம்:
(16.04.2020) ஏப்ரல் மாதம்

தலித் மக்களை தரக் குறைவாக இழிவு படுத்தி Tiktok சமூக வலைத்தளங்களில் பரப்புரை ஏற்படுத்திய நடராஜன், சக்திவேல் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடராஜன் கைது செய்தனர். ஆனால் சக்திவேல் என்பவர் திட்டக்குடி அருகில் மாரியம்மன் கோயில் தெரு , கொரக்கவாடி பஞ்சாயத்து தலைவர் ஆவார் இந்த சாதிய போக்கு மக்களிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

17) திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் சசிகலா அவர்களால் சொரியங்கிணத்துப் பாளையம் தலித் மக்கள் மக்கள் வீட்டில் மாட்டுக்கறி சமைத்ததால் உணவில் பினாயில் ஊற்றிய சம்பவம்.

18) கடலூர் மாவட்டம்:
(01.04.2020) ஏப்ரல் மாதம்

கடலூர் மஞ்சகுப்பம் மாவட்ட ஆட்சியாளர்
அருகே தலைமை தபால் நிலையம் இடத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேதகர் அவர்களின் சிலையை அவமதித்த சாதி வெறி கும்பல்.

19) கன்னியாகுமரி மாவட்டம்:
(03.05.2020)மே மாதம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே எறுப்புக்காடு பகுதியில் தலித் இளைஞர் வினோத் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு உடந்தை காவல்துறையும்..

20) ஈரோடு மாவட்டம்:
(07.05.2020)மே‌ மாதம்

தமிழக அரசின் அலட்சியம்.
ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை அருகேயுள்ள நெருஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பாலன் பணியின்போது மரணமடைந்தால் பாலனின் உடலை குப்பை வண்டியில் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம்.

21) தஞ்சாவூர் மாவட்டம்:
(09.05.2020)மே‌ மாதம்

தஞ்சாவூர் மாவட்டம்பாப்பாநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிளாமங்கலம் கள்ளர்களால் தாக்கப்பட்ட தலித்துகளுக்கு நீதிவழங்க கள்ளர்சாதி DSPசெங்கமலக்கண்ணையே விசாரணை அதிகாரியாக நியமித்த தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!
(07.05.2020)முதல் இன்றுவரை(09.05.2017) பாப்பாநாடு காவல்நிலையத்தில் தலித் சமூத்தைச் சேர்ந்த புகார் தாரர் ராஜகுரு புகாருக்கு FIRம் இல்லை.எதிரிகளைக் கைது செய்யவும் இல்லை!
Dsp செங்கமலக்கண்ணன் இருதரப்பையும் அழைத்து கட்டைப்பஞ்சாயத்துப் பேசுகிறார்!
360குடும்பங்கள் வாழும் கள்ளர்கள் தலித்கள் புகுந்து தாக்கும்போது கள்ளர்களின் தங்க நகையை தலித்துகள் பறித்துக் கொண கொண்டார்களாம் என்று வீண்பழி சுமத்தியுள்ளனர்…

22) புதுக்கோட்டை மாவட்டம்:
(06.05.2020)‌ மே மாதம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேம்பக்குடி கிராமத்தில் தனது தோப்பிற்கு வேலைக்கு வராத காரணத்தினால் தலித் இளைஞர் ராஜேஷை காவல்துறை முன்பாக கட்டிவைத்து கத்தியால் குத்தி, அவரது தாய் ராஜகுமாரியும் தாக்கிய சாதி வெறி பிடித்த நீலகண்டன்.

23) சென்னை மாவட்டம்:
(25.03.2020) மார்ச் மாதம்

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த தூய்மை பணியாளர் பெண்மணியிடம் தங்கள் வீட்டின் முன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி சண்டையிட்டு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த பெண்மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தூய்மை பணிப்பெண் ஒருவரை சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்து அவர்கள் ஆடைகளை கிழித்து எறிந்தனர். தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

24) திருப்பூர் மாவட்டம்:
(04.05.2020)மே‌ மாதம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை பணி செய்ய விடாமல் சாதியைச் சொல்லி திட்டிய சாதிவெறி பிடித்த குப்புசாமி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு உறுதி செய்தும் கைது செய்யப்படவில்லை.

25) நாமக்கல் மாவட்டம்:
(08.05.2020) மே மாதம்

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி அருந்ததியர் தெரு சமூக சட்டக்கல்லூரி தலித் மாணவர் சசிக்குமார் மீது சாதி வெறி தாக்குதல்..
பெரியார் அம்பேத்கர் பதிவுகளை முகநூலில் போற்றும் ஆள் நீதானே என்று மூன்று சாதிவெறி கும்பல்கள்தாக்கியுள்ளனர்.

26) சேலம் மாவட்டம்:
(08.05.2020) மே மாதம்

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பூக்கடை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி தலித் இளைஞர் விஷ்ணுபிரியன் சாதி வெறி வன்னிய கும்பல்களால் படுகொலை; அவரது தம்பி நவீன் குமார்பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

27) திண்டுக்கல் மாவட்டம்:
(27.04.2020) ஏப்ரல் மாதம்

நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கோட்டைபட்டி. இக்கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் தமிழ் செல்வன் ஆதிக்க சாதியை சேர்ந்த கவிதா என்கிற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு உள்ளார். கவிதாவின் உறவினர்களால் ஆபத்து என்பதினால் தம்பதியினர் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 16.04.2020 அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளை எடுத்து கொண்டு 22.04.2020 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்து உள்ளனர். இதனை தெரிந்து கொண்ட கவிதாவின் சாதிக்காரர்கள் 50 பேர் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு 27.04.2020 அன்று தலித் குடியிருப்புக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 தலித்துகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்..

28) விழுப்புரம் மாவட்டம்:
(09.05.2020)மே மாதம்

விழுப்புரம் மாவட்டம் நல்லாப்பாளையம் தலித் பழங்குடி சமூகம் சார்ந்த அய்யனார் அதிகாரிகள் அலட்சியத்தால் இறந்தனர்….

29) விழுப்புரம் மாவட்டம்:
(07.05.2020)மே மாதம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 3 தலித் மக்களை பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நகனூர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த 10 நபர்கள் தாக்கியுள்ளார்கள். இதேபோன்று அப்பகுதியிலுள்ள சுற்றியுள்ள தலித் மக்களை திட்டமிட்டு தாக்கிக் கொண்டு வருகிறார்கள்..
புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப் படத்தை கிழித்து மோதலை உருவாக்கி உள்ளார்கள்..

30) தூத்துக்குடி மாவட்டம்:
(08.05.2020) மே மாதம்

தூத்துக்குடி மாவட்டம்
உடையார்பாளையத்தில் தலித் சமூகத்தை சார்ந்த பலவேசம் என்பவர் அடுத்த ஊரைச் சேர்ந்த தேவர் சமூகத்தை சார்ந்த அதிமுக ஒன்றிய நிர்வாகியான வட்டிக்கு விடும் சண்முகசுந்தரம் என்றவனிடம் தன் இடத்து பத்திரத்தை வைத்துப் பணம் வாங்கியிருக்கிறார்.முதல் பணமும் வட்டியும் முழுமையாகச் செலுத்தியபின்னரும் பத்திரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து மேலும் வட்டி கேட்டிருக்கிறார் சண்முகசுந்தரம்.முந்தா நாள் வியாழனன்று பலவேசம் சண்முகசுந்தரத்தைச் சந்தித்து பத்திரத்தைக் கேட்டபோது ஜாதிவெறிக் கூட்டத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.பலவேசம் கொடுத்த புகாரின்பேரில் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டிருக்கிறது.அன்றிரவே சண்முகசுந்தரத்தின் தம்பி மற்றும் ஒரு கும்பல் பலவேசத்தின் வீட்டில் புகுந்து அவரையும் அவரின் மருமகன் தங்கராஜ் என்பவரையும் வெட்டிக்கொன்றிருக்கிறது.

31) சென்னை மாவட்டம்
(14.04.2020) ஏப்ரல் மாதம்
சென்னையில் பிராமணர் குடியிருப்பில் தூய்மைப் பணியாளர்கள் தன் பணியை செய்கிற பொழுது தரைகுறைவாக சாதியின் பெயரையும்,சுயமரியாதையும் தாக்கிப் பேசிய சாதி வெறி முதியவர், சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளது ஆனால் கைது செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *