அரசின் நிதியுதவி கிடைக்காமல் வாழ்வாதாரமின்றி தவிக்கும் புகைப்பட கலைஞர்கள்-  அரசு நடவடிக்கை எடுக்குமா? 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் நிதி உதவி கிடைக்காமல் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 700 புகைப்படக் கலைஞர்கள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், சுய தொழில் மற்றும் குறு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சிலருக்கு அரசின் மூலம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத பலருக்கு அரசின் மூலம் வெளியிடப்பட்டுள்ள செல் நம்பரில் பேசி நலத்திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புகைப்படக் கலைஞர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைக்கப்படாததால் ஊரடங்கு கால கட்டங்களில் வாழ்வாதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பரமக்குடி ,ராமநாதபுரம் ,ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம்  மாவட்டத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர். மே மற்றும் ஜூன் மாதங்களில்  விசேஷங்கள் அதிகமாக நடைபெறும், அந்த கால கட்டங்களில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, ஆண்டு முழுவதும் குடும்பத்தை காப்பாற்றும் நிலையில் புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர் .இந்தநிலையில், கடந்த 49 நாட்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள், கட்சி விழாக்கள், வழிபாட்டுத் தளங்களில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தாங்கள் முன்கூட்டியே பெற்ற ஆடர்கள்  அனைத்தும் ரத்தாகிவிட்டது.இதனால், வாழ்வாதாரம் இல்லாமல் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிதி உதவியினை போல், புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க வேண்டும் மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *