நயினார்கோவில் பகுதி வழியாக சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வெளி மாவட்டத்தினர் – போலிசார் தீவிர கண்காணிப்பு.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள   சொந்த ஊருக்கு திரும்பி வருவதால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக  நயினார்கோவில் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கடலாடி பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தினர் அதிகமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில்  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் . கொரோனா பிரச்சனையால் அதன் தொடக்கத்திலேயே பிப்ரவரி, மார்ச் மாதங்களில்  60 சதவீதம்  பேர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். மற்றவர்கள் அங்கேயே தங்கி இருந்தனர்.  இந்த நிலையில், கோயம்பேடு சந்தையால் கொரோனா தொற்று  அதிகமாகி வருவதால், சென்னையில் தங்கியுள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர். அதைப்போல், பிற மாவட்டங்களில்  கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.    அதனால், குடும்பத்துடன் பிற மாவட்டங்களில்  வசிப்பவர்கள் கிடைக்கும் வாகனங்களில் சொந்த ஊருக்கு திரும்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில், ராமநாதபும் மாவட்டத்தில்  கிராமப்புறங்களில் கொரோனா தொற்று இல்லாத சூழ்நிலையில்,  தற்போது கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிகளும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சிவகங்கை வழியாக நயினார்கோவில் பகுதிகளில் சிலர் முறைகேடாக இராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கிராமச் சாலைகள் அனைத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம், மகாராஷ்டிராவில் இருந்து வருகை தந்த ஆறு நபர்களை பிடித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்திற்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *