அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

“தன் கட்சியை சாராத, கணவருமல்லாத எதிர்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்கு பின் நடக்கும் சந்திப்புகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு” – சசிகலா புஷ்பா மனு மீது டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பேஸ்புக், கூகுள், யூ டியூப் ,வலைத்தளங்களில் இருந்து தனது புகைப்படங்களை நீக்க வேண்டும் என்ற சசிகலா புஷ்பாவின் மனு மீது டெல்லி நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது

அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா தற்போது பாஜகவில் இணைந்தும் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா புஷ்பா வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது தொடர்பான பல்வேறு படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இது குறித்து தன்னை அவதூறாகவும், தவறாக சித்தரித்து இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா கடந்த 2016-ல் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயல்களால் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே காலதாமதமின்றி உடனடியாக அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சஹாய் என்ட்லா, “இந்த வழக்கில் மனுதாரரின் அந்தரங்க உரிமையும், அவர் யாரை சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உள்ள உரிமையையும் சமன்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது.

எனவே அந்த வகையில் சசிகலா புஷ்பா ஒரு மக்கள் பிரதிநிதி, மேலும் தன் கட்சியை சாராத, கணவருமல்லாத எதிர்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுகளுக்கு பின்னால் சந்தித்து பழகியதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு. எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா புஷ்பா தரப்பு வாதத்தின் போது, எதிர்கட்சி நபருடனான அந்த சந்திப்புகள் பொதுநலனுக்கான சந்திப்பு என்பதை எடுத்து வைக்கவும் இல்லை, சந்திப்புகளை மறைத்திட வேண்டும் எனவும் வாதிடவில்லை.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை அளிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே மனுதாரர் தொடர்புடைய புகைப்படங்களை நீக்கவோ, அவற்றை பார்ப்பதிலிருந்து கட்டுப்பாடு விதிக்கவோ பேஸ்புக், கூகுள், யூ டியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதுடன், மனுதாரர் சசிகலா புஷ்பா, பேஸ்புக் நிறுவனத்துக்கு 2 லட்ச ரூபாயும், கூகுள் மற்றும் யு டியூப் நிறுவனங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழக்கு செலவிற்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

செள.திலிப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *