திமுக கூட்டணியில் பிளவா ?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் புறக்கணிக்கப்படுவதாக திமுக மீது காங்கிரஸ் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி உள்ளது.. நாளைக்கு ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடக்க இருக்கிற சமயத்தில், இப்படி குற்றச்சாட்டை அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.. இதனால் திமுக கூட்டணியில் பிளவா என்ற சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் திமுக கூட்டணி கட்சி அதிமுகவைவிட கூடுதலாக ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றது.
மேலும் நாளை ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலும் நடக்க இருக்கிறது.
இந்த சமயத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளதுடன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இந்த அஅறிக்கையை காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கேஆர் ராமசாமி மற்றும், அக்கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
அதில், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடக்கத்தில் இருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.

திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில்கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்களில் மட்டுமே திமுக தலைமை வழங்கப்பட்டுள்ளது.
27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
போன வாரம்கூட, அழகிரிசெய்தியாளர்களிடம் பேசும்போது, “உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.. அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்… ஊராட்சி ஒன்றியங்களில் 29%, மாவட்ட ஊராட்சியில் 21% இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது” என்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.. ஆனால் நாளைக்கு தேர்தல் உள்ள நிலையில் காங்கிரசின் இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்வலையை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *